Friday, July 23, 2010

ஈரமனம்

கூந்தலில்

ஒற்றை ரோஜாவை ரசித்திடும்

நாகரீக மனிதன் நான்

கூந்தலை

கூடை பூக்களில் மறைத்திடும்

கிராமத்து பெண்

என் காதலி

தினமும் வாங்கி வந்தேன்

கூடை நிறைய பூக்கள்

அவளுக்காக இல்லை

எழுபது வயதிலும்

சுட்டெரிக்கும் வெயிலில்

அயராது பூ கட்டி விற்கும்

ஒரு பெண்மணிக்காக

நாகரீக போர்வைக்குள்

இருக்கத்தான் செய்கிறது

ஒரு கிராமத்தானின் இரக்கம் ….


ஆசை விதைகள்

நேற்று என்ற நிழலில்

கருவாக தோன்றி

இன்று என்ற நிஜத்தில்

உருவமாக மாறி

அறுவடைக்கு காத்திருக்கின்றன

ஆசை விதைகள்

நாளை என்ற கனவில்...

Saturday, January 2, 2010

ஓர் அகதியின் (அகத்தின்) குரல்

தினமும் கனவுகளில் உன் வருகை
நிஜத்தில் எப்பொழுது ?

கற்பனைகளில் உன்னுடன் உரையாடல்
நிஜத்தில் எப்பொழுது ?

உறவுகளில் மென்மை
துணைவனின் தோழமை
மழலையின் கால் தடம்
இன்னும் பறந்து விரிகிறது
நிழல் உலகில்
என் எண்ணங்களும் ஏக்கங்களும்

நிஜ உலகிற்கு
அழைத்து வருகிறது
ரணமாகும் பார்வைகளும் பேச்சுகளும்

நாளை நிச்சயம்
கனவு மெய் ஆகும்
என்ற எதிர்பார்ப்பில் உறங்கிடும் மனம்
ஏனோ விடியும் பொழுது
இன்றும் இல்லையா?
என்றுமே இல்லையா?
என்று விடை தேடி அலை பாய்கின்றது

என் உறவுகள் மலர்வது ஏனோ
வெறும் கனவுகளில் மட்டும் தானோ

Tuesday, December 1, 2009

உன்னை பிடிக்கும்

மழையில் நனைய பிடிக்கும்
இசையில் மிதக்க பிடிக்கும்
புத்தகத்தில் மூழ்க பிடிக்கும்
நண்பர்களுடன் அரட்டை பிடிக்கும்
வித விதமாக சமைத்திட பிடிக்கும்
மொட்டை மாடியும் பௌர்ணமி நிலவும் பிடிக்கும்
கடற்கரை மணலில் கை கோர்த்த நடை பிடிக்கும்
ரயிலில் ஜன்னல் ஓர பயணம் பிடிக்கும்
இயற்கையை ரசிக்க பிடிக்கும்

குழந்தையாக
குமரியாக
மாறி மாறி வியந்து நிற்கும்
என்னை
என் ரசனைகளை
மெய்மறந்து ரசிக்கும்
உன்னை
மிக பிடிக்கும்

இப்படி
உன்னை பற்றிய கனவுகளில்
திளைத்து இருக்க பிடிக்கும் …….

பிழை

கல்யாண அழைப்பிதழல்
மனதில் தங்கிய பெயர்
அச்சில் ஏறுவதில்லை
அச்சில் ஏறிய பெயர்
மனதில் தங்குவதில்லை
பிழையின்றி அமைய
அச்சுதிருத்தம் வேண்டும்
வார்த்தைகளுக்கு மட்டுமல்ல
வாழ்கைக்கும்தான்

இயற்கையுடன் தோழமை

சிறகடித்த காலங்களில்
ரசிக்க மறந்த இயற்கை
சிறகொடிந்த தருணத்தில்
நண்பர்கள் ஆகின

தடம் பதித்து சென்ற உறவுகளுக்குகாக
வழி மேல் விழி வைத்து
நாம் காத்திருக்க
நமக்காக காத்திருக்கம் தோழி
நிலா

நினைவு அலைகளில்
மூழ்கும் நம்மை பார்த்து
கண்சிமிட்டி ரசிக்கும் நட்சத்திரங்கள்

பிரிவிலும் துரோகத்திலும்
வறண்டு கிடக்கும் இதயத்தை
சிறிது நனைத்து செல்லும்
மழை துளிகள்

ஆதரவாக அணைத்து கொள்ளும்
தென்றலின் நேச கரங்கள்

விடியலை நோக்கி நீளும்
இந்த தனிமை பயணமும்
ஒரு சுகம் தான்
இவர்கள் உள்ள வரை …………..

Sunday, November 22, 2009

காற்றாடி

ஏழைகளின் கனவுகளுக்கு
மீண்டும் ஒரு தடை
நகர எல்லைக்குள்
இலவசமாக வானில் பறந்திட
அனுமதி இல்லை
காகிதத்தில் கட்டி பறக்கவிட்ட
அவர்களின் இதயங்களுக்கு